கவிதை
என்னைத் திருடியவன்!
வெள்ளை வெளீரென்று
வெண்மையான உடலும்
இமைகளால்
இதயம் கொள்ளை கொள்ளும்
பார்வையும்!
இன்னிசை பொங்கும்
உனது சப்தமும்
என்னைக் கொள்ளை கொள்ளுதடா!
காத்திருந்து பார்த்திருந்து
நான் உண்டவுடன்
என் உணவு மீதியை
நீ உண்டாய்!
என்னைப் பகைவர்கள்
பயங்காட்டினால்
நீயே உன் திறத்தால்
அவர்களைப் பயங்காட்டுவாய்!
உறவுகள் என்னை
விட்டுச்சென்றாலும்
அவர் என்னை
ஒதுக்கி வைத்தாலும்
காலம் பூராகவும்
நீ மட்டும்
என்னுடன் இருந்தாய்!
எனக்கும் ஆசைதான்
உனக்கும் ஆடைவேண்டித் தருவதற்கு
எங்கேயடா நீ
வாங்கப் போகிறாய்!
கோயில் குளத்திற்கு அழைத்துச் செல்ல
எனக்கும் ஆசைதான்
ஆனால்!...
அங்கு வந்தாலும்
பிரச்சினையைத்தானே நீயும் வளர்ப்பாய்
இருக்கட்டும் இருக்கட்டும!;
இதெல்லாம் இருக்கட்டும்!
என் கருவிழி சொல்லுதடா
எங்கிருந்தோ வந்த நீ
எனக்காக வாழ்கின்றாய் என்று!....
என்றும் என்னுடனே இருப்பாய்
நான் வளர்க்கும்
செல்ல நாய்க்குட்டியே!.....
- தாழையூர் கிருஷாந்தி -
கருத்துகள்
கருத்துரையிடுக