வாழைச்சேனையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் பத்திரகாளி அம்மன் ஆலயமும் ஒன்று. இது ஆடி மாதமாகையால் ஊரெங்கும் அம்மனுக்குத் திருவிழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் மிச்சமிருக்கும் எச்சங்களைக் காணக் கிடைக்கும் காலம் பெரும்பாலும் திருவிழாக் காலங்கள்தானே. அதிலும், எங்கள் அம்மன் கோவில் திருவிழாவென்றால் ஊருக்கே ஒரு களை வந்துவிடும்.
தொடர்ந்து பத்துநாட்கள் நடக்கும் திருவிழா - இரவு ஒன்று, இரண்டு மணிவரை கோயிலும் - அண்டியிருக்கும் தெருக்களும் அல்லோல கல்லோலப்படும். கல்குடா தொங்கலிலிருந்து கறுவாக்கேணி வரையுள்ள ஊர்களிலிருந்து இந்தப் பத்து நாட்களும் பெற்றோர்கள் - தங்கள் குழந்தைகளுடன் அலங்கரித்து அணிவகுத்து வருவர். அதற்காகவே ஊரிலிருக்கும் இளைஞர் பட்டாளங்களும் - பத்து நாளும் அம்மன் தரிசனத்துக்காய் கோயிலைச் சுற்றி வலம்வருவர்.
கோயிலை அண்டியுள்ள முக்கிய தெருக்களுக்கான பூசைகள் - ஒவ்வொரு நாளும் நடக்கும். அந்தந்த தெருவில் உள்ள வசதிபடைத்தவர்களும் - முக்கியஸ்தர்களும் - அந்த நாட்களில் கோயிலுக்குள் நாயகர்களாய் இருப்பர். சாமி தூக்குவது முதல் - வட்டா வாங்குவது வரை உள்@ர போட்டா – போட்டிகள் நடக்கும். எங்களவர்களின் பெருமை விளக்கும் வரலாற்றுச் சிறப்புக்களுள் இவையும் அடங்கி விடுகின்றது.
வெளியூரிலிருந்து வந்த பிரதம குருக்களும் - உதவிக் குருக்களும் - மேள – நாதஸ்வர வாத்தியக் கலைஞர்களும் கோயிலில் பத்துநாட்களும் டேரா போட்டிருப்பர். இதற்காக சில லட்சங்கள் அவர்களுக்கு செலவாகும். எங்கள் அம்மன் கோவில் ஒன்றும் லேசுப்பட்டதில்லை. திருப்பதி – பழனி மாதிரி – எங்க அளவுக்கு – எங்க காளியம்மன் கோயிலும் ஒரு திருப்பதிதான். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமா கட்டிட வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. அழகியதொரு கோபுரம் தான் எங்கள் ஊரவர்க்கு உள்ள பெரிய ஆசை. எப்படியாவது கோயிலுக்கு கோபுரம் கட்டவேண்டும் என்பது பலரின் நீண்டநாள் கனவு.
இம்முறை திருவிழா - இன்னும் விஷேசமாகிவிட்டது. கோவில் வெளி வீதியில் நிறைந்திருக்கும் - கடைகளில் நான்கைந்து சிங்களவர்களின் கடைகளும் அமைந்திருந்தது சிறப்பு. இலங்கைக்குள் தான் எங்கள் ஊரும் இருக்கிறது என்ற நினைப்பு இதைப் பார்த்தபின்தான் உறுதியானது.
சனக்கூட்டம் அலைமோதியது திருவிழாவில்.
நீண்ட காலத்துக்குப் பிறகு இளைஞர்களும் - யுவதிகளும் தைரியமாக – தனியாக – சந்தோசமாக கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
கோயில் பூசைகள் யாவும் ஆகம – முறைப்படி நடக்கத் தொடங்கி விட்டதால் - ‘பாணக்கத்துக்காய்’ பரிதவிக்கும் சிறுசுகளையும் - ஆடும் சாமிகளை கட்டும் - சிறு சிறு மந்திரவாதிகளையும் காண்பது இப்போது அரிதாகிவிட்டது. பத்தாம் நாள் அதிகாலை தீ மிதிப்புடன் திருவிழா நிறைவு பெறும். தீ மிதிப்பு முடிந்ததும் சாமியை எடுத்துச் செல்வார்கள் தீர்த்தமாடுவதற்காக.
எங்கள் ஊரில் மிகவும் பிரசித்தமான பாசிக்குடா கடற்கரையில் தான் தீர்த்தமாடுவர். சாமியை எடுத்துச் செல்லும் ட்ரக்டரின் பின்னால் - ஏராளமான ஆண்களும் - பெண்களும் - சிறுவர்களும் - அவர்களோடு சேர்ந்து நிறைய சைக்கிள்களும் - பைக்குகளும் ஊர்வலமாகவே போகும். மஞ்சளும் - குங்குமமும் சேர்ந்து திரும்பி வரும்போது எல்லோரும் நீராடி வருவர். அவர்கள் திரும்பி வரும்போது – கோயிலில் அன்னதானம் தயாராகி விடும். அன்னதானத்திலும் கலந்து – சிறப்பித்துவிட்டுத்தான் எங்கள் அம்மனின் திருவிழாவை நாங்கள் முடித்து வைப்போம்.
ஒவ்வொரு முறையும் அன்னதானம் தருகின்ற சிவலிங்கத்தார் குடும்பம், ஊரில் வசதியான குடும்பத்தவர்கள். வியாபாரம் அவர்களது சொந்தத் தொழிலாக இருந்தாலும், கோயில் போன்ற தரும காரியங்களின் மூலம் சிவலிங்கத்தாருக்கும் அவரது இரு சகோதரர்களுக்கும் ஊரில் மிகுந்த மரியாதை.
‘ட்;ரக்டர்;’ சிவலிங்கம் என்னும் பெயரால் தான் அவரது மொத்தக் குடும்பமும் அடையாளம் காணப்பட்டது. அதற்குக் காரணமும் இருக்கிறது. ஊருக்குள் முதல் முதல் ‘ட்;ரக்டர்;’ வண்டி வாங்கியவர் அவர்தான், அதனால் ‘ட்;ரக்டர்;’ என்பது அடைமொழியாகி நிலைத்துவிட்டது. சிவலிங்கத்தாரின் அண்ணர் பெரியசாமியும் லேசுப்பட்டவரல்ல. இரண்டுமுறை வீ.சி. எலெக்ஷனில் நின்று வென்றிருக்கிறார்.
பள்ளிக்கூடம் - கோயில் - கழகங்கள் என எங்கிருந்து, யார் உதவி கேட்டுப் போனாலும் பணத்தினை வாரி வழங்கி வந்தோரை மகிழ்ச்சிப் படுத்துவதில் சிவலிங்கத்தாரும் அவரது அண்ணரும் வள்ளல்கள்தான்.
அன்னதானத்தன்று வெள்ளையும் சுள்ளையுமாய் ஆலமரத்தின் கீழே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர் சிவலிங்கத்தார் குடும்பத்தினர்.
“ஓங்கி வளர்ந்திருந்த ஆலமரம். கீழே ஏராளமான மனிதர்கள் அன்னதானத்தில் பங்கெடுத்துக் கொண்டிருந்தனர்.
“நல்லாச் சாப்பிடணும்… நல்லாச் சாப்பிடணும்!...
புள்ள அங்க கொஞ்சம் கறிவை!
தம்பி… சோத்துச் சட்டியை இஞ்ச கொண்டு வா!...
ஆ… இதென்ன! கேட்க வெட்கமா?....நல்லா திருப்தியாச் சாப்பிடுங்க!...”
சிவலிங்கத்தார்! கட்டளைகளைப் பிசிறிடித்தபடி அங்குமிங்கும் - சாப்பிடுபவர்களைச் சுற்றிச் சுற்றி கவனித்துக் கொண்டிருந்தார்.
“இப்படியொரு… மனுசன் பாருங்க!... கடவுள் நல்லவங்களுக்கு அள்ளியள்ளிக் கொடுப்பான். அதுதான் இந்த மனிசன் இவ்வளவு நல்லது பண்ணுது. பள்ளிக்கும் குடுக்கான் - கோவிலுக்கும் குடுக்கான்!...” தன்னருகே நின்ற கோவில் தலைவரிடம் பிரஸ்தாபித்துக் கொண்டிருந்தார் கோயில் குருக்கள்.
“உண்மைதான் ஐயா, ஆரு என்ன கேட்டாலும் முகஞ்சுளிக்காது மனுசன். தண்ட தகுதிக்குத் தக்கதா ஏதாவது செய்துகொண்டே இருக்காரு!..” தலைவரும் ஒத்து ஊதினார்.
அன்னதானம் நடந்து கொண்டிருந்தது.
கோயில் முகப்பில் காளி அம்மனின் சாந்த முகம் - கருணை நிறைந்த கண்களுடன் நிற்கும் அம்மனின் கீழே அதே சாந்தத்துடன் புலி.
திருவிழா தடபுடலில் கோவில் வெளிப்பிரகாரம் எங்கும் நிறைந்திருந்த காகிதக் குப்பைகள். காற்றில் சுருண்டும் உருண்டும் நகர்ந்து கொண்டிருந்தது.
அன்னதானம் - நடந்த இடத்தில் ஏராளமான மனிதர்கள் இருக்க, கோயிலின் பிரதான வீதி வாயிலில் இரண்டு பக்கங்களிலும் நான்குபேர் குந்தியிருக்கின்றனர்.
கோயிலுக்குள் நுழைபவர்களையும் வெளியேறுபவர்களையும் நிமிர்ந்து பார்த்து மெதுவாக அவர்களை நோக்கி கையை நீட்டுகின்றனர். எவரும் கவனித்ததாய் தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம், ஒரு ரூபாய்! இரண்டு ரூபாய்! சில்லறைகளை அவர்களின் உள்ளங்கைகளில் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.
கையில் காசு போட்டவர்களை பார்த்து ஒரு கும்பிடு.
போடாதவர்களை ஏக்கத்துடன் ஒரு பார்வை.
வெள்ளிக்கிழமைகள் - பண்டிகை நாட்கள் - திருவிழாக் காலங்களில் தரிசனம் தரும் இந்த மனிதர்களுள் ஒரு மூதாட்டி மட்டும் தன் முகம் தெரியாதவாறு பழஞ்சேலையால்! தலையை நன்கு போர்;த்தியிருந்தாள்.
அன்னதானம் முடிந்ததும் தங்களுக்கும் ஏதாவது கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கையுடன் காத்திருந்த அந்த நான்கு பேரும், வெயில் ஏற ஏற வேலியின் அருகே நெருக்கிக் கொண்டிருந்தனர்.
ஆலமரத்தின் கீழிருந்து – கொஞ்சம் கொஞ்சமாக எழும்பிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும்! சிவலிங்கத்தாரிடம் சிரித்துச் சிரித்துப் பேச, அன்னதானத்தில் பங்கெடுத்ததற்கான நன்றியை தெரியவைத்துக் கொண்டிருந்தனர்.
நண்பகல் ஆனதும்! அன்னதானம் நிறைவுபெற்றது.
ஆட்டோக்களும் பைக்குகளும் கோயில் வீதியிலிருந்து அகன்று கொண்டிருக்க – கோயில் வாசலில் காத்துக் கிடந்த அந்த நால்வரின் மடிகளில் ஒவ்வொரு பார்சல்கள்!...
பார்சல் கொண்டு வந்து – தந்த சிவலிங்கத்தாரின் இளைய மகனின் முகத்தை நன்றியோடு நோக்கின! மூன்று முகங்கள்.
பாசத்தோடு நோக்கியது ஓர் முகம்!
அந்த மூதாட்டியின் முகம்!
பார்சலை வாங்கிய பின் மெதுவாகக் கேட்டார் பக்கத்திலிருந்த வயோதிகர், அந்த மூதாட்டியிடம்,
“உன்ட புள்ளயள்தானே! அந்த பெரிய வாகனத்தில போறதுகள்!?...”
தலையைப் போர்த்தியிருந்த சேலைத் தலைப்பால் கண்களை ஒற்றிக் கொள்கிறாள் அவள்!. பதில் எதுவும் இல்லாது.
மீண்டும்!... அதே,
‘ஓங்கி அகன்று வளர்ந்திருந்த ஆலமரம்!
கீழே ஏராளமான மனிதர்கள்! இருந்ததற்கான அடையாளம்!...
(யாவும் கற்பனையல்ல)
கருத்துகள்
கருத்துரையிடுக