வாழைச்சேனைப் பிரதேசத்தின் சமூக, கலை, இலக்கிய, கல்வி பணியாளர்கள்
கந்தசாமி நிதிகரன்
1978 ஜுன் மாதம் 19ஆம் திகதி பிறந்த இவர், தற்போது ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். கற்றல், கற்பித்தல் புலத்தில் சிறந்து விளங்குகின்ற இவர், கலைமாணி, முதுகலைமாணி எனப் பல பட்டங்களைப் பெற்று மென்மேலும் தனது கற்றல் ஆளுமையை விருத்தி செய்து வருகின்றார். வாழைச்சேனைப் பிரதேசத்தில் க.பொ.த. உயர்தரத்தில் அரசறிவியல் பாடத்தினை கடந்த பல ஆண்டுகளாக பிரத்தியேகமாகவும், பாடசாலையிலும் கற்பித்து சிறந்த அரசறிவியல் ஆசிரியராகவும் விளங்கி பல மாணவர்களின் பல்கலைக்கழகக் கனவுக்கு வளம் சேர்ப்பவராகவும் விளங்கும் இவர், தனது முதுகலைமாணி பட்டக்கல்விக்காக ‘கோறளைப்பற்றுப் பிரதேசத்தின் ஆக்க இலக்கியப் படைப்பாளிகள்’ எனும் ஆய்வினை மேற்கொண்டார். அதில் தாழை செல்வநாயகம், ஹெட்டி ஆராச்சி மெத்தியேஸ், முத்துமாதவன், மு.தவராஜா, எஸ்.ஏ.ஸ்ரீதர் போன்ற வாழைச்சேனைப் பிரதேசத்துப் படைப்பாளிகளது வாழ்க்கை, படைப்புக்கள் குறித்து விரிவாக எழுதியிருக்கின்றார்.
திரு.மணி ரஞ்ஜன்
1981 பெப்ரவரி 14 ஆம் திகதி பதுளையில் பிறந்த இவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் ‘ஏசியன்’ எனம் கணினிக் கல்வி நிறுவனத்தை நிர்வகித்து வருகின்றார். வெறுமனே கணினிக் கல்வி கற்பித்தலோடு மட்டும் நின்று விடாது, பல்வேறுபட்ட சமூகக் கலை இலக்கியப் பணிகளிலும் ஆர்வத்துடன் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார். அத்தோடு இவரது பணிகளில் குறிப்பிடத்தக்கதாக விளங்குவது ‘ஸ்டுடண்ட்’ (4 இதழ்கள்) எனும் கல்விச் சஞ்சிகையையும், கம்ப்யூட்டர் பவர் (2 இதழ்கள்) எனும் கணினிச் சஞ்சிகையையும் வெளியிட்டுள்ளார். கல்விக்கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள், நாடகப் போட்டிகள் போன்றவற்றுக்கும் தன்னாலான பங்களிப்பினை வழங்கி வருகின்றார்.
திரு.யோகநாதன் சிவகுமார்
1974 ஜனவரி 06ஆம் திகதி பிறந்த இவர், ஆசிரியராக இருந்து, தற்போது மட்-வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் உப அதிபராக பதவி வகிக்கின்றார். ஆசிரியப் பணியோடு கலை, இலக்கியப் பணிகளிலும், சமயப் பணிகளிலும் ஈடுபட்டு வரும் இவர் ‘இந்து’ அகலியல் எனும் மன்றத்தைத் தோற்றுவித்ததோடு மட்டுமன்றி, ‘அகல்’ எனும் பெயரில் சமய சஞ்சிகை ஒன்றினையும் வெளியிட்டுள்ளார்.
வாழைச்சேனையில் வெளிவந்த முதலாவது சமய சஞ்சிகை இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. வாழைச்சேனை இந்துக்கல்லூரியிலிருந்து வெளிவருகின்ற ‘செவ்வாழை’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ள இவர் ‘விக்னேஸ்வரா கல்வியகம்’ எனும் தனியார் கல்வியத்தையும் தோற்றுவித்து நிர்வகித்து வருகின்றார். கல்வி, விளையாட்டு, சமயம் எனப் பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்ற திரு.யோ.சிவகுமார் அவர்கள் வாழைச்சேனைப் பிரதேசத்தின் பிரபலங்கள் வரிசையில் இவரை அறிமுகம் செய்வதில் மகிழ்வுறுகிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக